Monday, April 12, 2010

ரேஷன் - தெரிந்த பெயர், தெரியாத தகவல்கள்

ரேஷன் கடைக்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களே! உங்கள் அனைவரையும் வருக வருகவென்றும், மீண்டும் மீண்டும் வருகவென்றும் மீண்டும் மீண்டும் வரவேற்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் எய்துகிறேன்.

ரேஷன் கடை என்பது தமிழகத்தில் திரிந்து நியாய விலைக் கடை என்ற பெயரில் இயங்குவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆயினும் ரேஷனின் உண்மையான பணி நியாய விலையில் வழங்குவது மட்டுமல்ல, குறிப்பிட்ட அளவே கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களை உரிய முறையில் பகிர்ந்தளிப்பதும் ஆகும். ஆகவே ரேஷன் கடைகளை "நியாய விலை பகிர்ந்தளிப்புக் கடை" என்றழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

பகிர்ந்தளிப்பது என்பது பன்னெடுங்காலமாகவே இருந்துவரும் ஒரு செயல். ஏனெனில் எல்லா நேரத்திலும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. ஆயினும், ஒரு சில பொருட்கள் அனைவருக்கும் அவசியம் தேவைப்படுகிறது.

முன்னாட்களில் போர்க்காலங்களில் சேமிப்பதும் பகிர்ந்தளிப்பதும் மிக முக்கியமான செய்கைகளாக இருந்தன. "ஒரு போர்ப்படை அதன் வயிற்றின் மீது முன்னேறுகிறது" என்றான் மாவீரன் நெப்போலியன். உணவைச் சுருக்கினால் படை வேகமாக நகரும். உணவைப் பெருக்கினால், அதற்கான பொதிகளும் வண்டிகளும் அதிகம் தேவைப்படும். எனவே, படைவீரர்கள் குறைவாக உண்ண வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது.

ஆங்கிலேய ஆட்சி வரும் வரை அவரவர் பகுதியில் விளையும் பொருட்களே உணவுப் பொருட்களாக இருந்து வந்தன. அரிசி என்பது அனைத்துத் தரப்பு மக்களும் உண்ணும் உணவாக இல்லை. ஆனால் பர்மா முதலான பகுதிகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, தமிழகத்தில் பரவலாக அரிசி உண்ணும் நிலை ஏற்பட்டது. இன்று கம்பு, கேழ்வரகு, திணை போன்ற மற்ற தானியங்களின் பயன்பாடு மருத்துவம் சார்ந்ததாகவே உள்ளது. ஆகவே செயற்கையாகவே அரிசியின் பயன் பாடும், தேவையும் அதனடியொற்றி தட்டுப்பாடும் ஏற்பட்டது.

சர்க்கரையின் பயன்பாடு தேனீர், கொட்டைவடி நீர் (குளம்பி (காபி)) ஆகியவற்றின் பயன்பாட்டிற்குப் பிறகே அதிகமாக தேவைப்பட்டது. அதுவரை கரும்பிலிருந்து காய்ச்சிய வெல்லம் மட்டும், விசேஷ காலங்களில் பலகாரம் செய்யவும், படையலுக்கும் பயன்பட்டது. சர்க்கரையின் பயன்பாடு பற்றி சர்க்கரை நோயும் பரவலாக்கப்பட்டுவிட்டது. சர்க்கரையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தோன்றிவிட்டன. சர்க்கரையின் தட்டுப்பாடு இவ்வாறாகத் தோன்றி அதன் விலையில் மாற்றங்கள் பலவாறாக ஏற்பட்டன.

கிராமம், சிற்றூர் தொடங்கி நகரம் வரை விறகடுப்பையோ, கரியடுப்பையோதான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர். கேழ்வரகும், கம்பும் உண்ணும் போது அதற்கான நெருப்பு சார்ந்த தேவை இல்லாமல் இருந்தது. அரிசியின் பயன்பாடும், தேனீர், குளம்பியின் பயன்பாடும் நெருப்பின் தேவையை அதிகரித்தது. இரவுப் பணிகளால் வெளிச்சம் தேவைப்பட்டது. மண்ணெண்ணை மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது. ஆனால் அதன் தேவையோ மிக அதிகம். கிடைக்கும் அளவோ மிகக் குறைவு. ஆகவே மண்ணெண்ணைக்கான பகிர்ந்தளிப்பு மிக முக்கியமானதாயிற்று.

கோதுமை காலம் காலமாக நவதானியங்களுள் ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. அரிசியின் தேவை அதிகமான போது அதற்குப் பதிலாக கம்பும், கேழவரகும் பயன்படுத்தப்படாமல், கோதுமையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். கோதுமைப் பண்டங்கள் மக்களை மிகவும் கவர்ந்திழுக்கவே அதன் தேவையும் அதிகரித்தது. மேலே சொன்ன கோதுமையோ, மண்ணெண்ணையோ தமிழகத்தில் விளையாத பொருட்களாகும்!

எண்ணெய் என்பது பண்டிகைக் காலங்களில் பயன்படுத்தும் பொருளாகவே இருந்து வந்தது. மற்றபடி தாளிப்பதற்கான எண்ணெயின் தேவை மிகக் குறைவே. மண்ணெண்ணெய் வந்து தீயின் பயன் அதிகரித்தவுடன் எண்ணெய்ப்பலகாரங்களின் பால் மக்களின் கவனம் திசைதிரும்பியது. ஆனால் தமிழகத்தில் விளையும் நிலக்கடலையும், எள்ளும் எண்ணெய் தேவையை ஈடுகட்ட முடியவில்லை. ஆகவே மாற்றாக ஈச்சங்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது.

இப்படித்தான் நீங்கள் ரேஷன் கடைகளில் அரிசிக்கும், சர்க்கரைக்கும், மண்ணெண்ணைக்கும், கோதுமைக்கும், பாமாயிலுக்கும் அல்லாடுகிறீர்கள்.

ஆனால் நியாயவிலை பகிர்ந்தளிப்புக்கடைகளில் விற்கப்படும் பொருட்கள், நம் வாழ்க்கை முறை ஆங்கிலேயர்களால் மாற்றியமைக்கப்பட்ட கதையைச் சொல்லாமல் சொல்வதை என்றாவது காது கொடுத்துக் கேட்டிருக்கின்றீர்களா?.

Sunday, April 11, 2010

ஆஹா ! அருமையான பதிவு!!

அன்பு வலையுலக சொந்தங்களே!!!

கடந்த சில நாட்களாக உங்களில் சிலருடைய பதிவில் என்னுடைய 'ஆஹா அருமையான பதிவு!' கருத்து வெளிவந்திருக்கும்.

இதை தயவு செய்து பிறிதொரு மொக்கை கருத்தாகவோ, பல்க் கமெண்ட் ஆகவோ எண்ண வேண்டாம்.

ஆழ்ந்த தீவிர யோசனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகே இந்த ஆ.அ. கமெண்டைப் போட்டிருக்கிறேன்.

சொந்தங்களே... நாம் ஒரு பதிவைப் போடுகிறோம் என்றால் அது நன்றாக இருக்கிறது என்பதால்தானே போடுகிறோம்.

யாராவது அருமையில்லாத பதிவைப் போடுவார்களா? சிலருக்கு அது அருமையில்லாததாகத் தெரியலாம். ஆனால் அந்தப் படைப்பாளிக்குத்தான் ஒரு படைப்பின் வலியும் சோகமும் தெரியும். அந்த வலியையும் சோகத்தையும் உணர்ந்ததால்தான் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் 'ஆஹா அருமையான பதிவு' என்று கருத்துரையிடுகிறேன்.

அப்படியே ஒரு பதிவு மிகவும் தரமற்றதாக இருந்தாலும், முதலில் பாராட்டிவிட்டு பிறகு குறையைச் சுட்டிக்காட்டுவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆகவே தோழர்களே.. இனி கருத்துரையிடும்போது முதலில் வாழ்த்திப் பிறகு குறையைச் சுட்டிக்காட்டுங்கள்.

இது பதிவுலகத்திற்கு மட்டுமல்ல நம் நிஜவாழ்க்கைக்கும் தான்.

என்றும் அன்புடன்
உங்கள்
ரேஷன் ஆபீசர்...

Thursday, April 8, 2010

எப்போது கிடைக்கும்?

எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

ஆனால் எப்போது போடுவோம் என்பதற்கு தினமும் கடைப் பக்கம் வரவேண்டும்.

அப்படி வராமல் போனால் கிடைக்காது.

கிடைக்கும் பொருட்கள்

எல்லா பொருட்களும் கிடைக்கும்.

வாங்க வாங்க

அன்பு நண்பர்களே,

உங்கள் பகுதியின்புதிய ரேஷன் கடை இனிதே திறக்கப்படுகிறது.

உங்களுக்குத் தேவையான அனைத்துப்பொருட்களும் இங்கே சல்லிசாகக் கிடைக்கும்.. ஆனால் கிடைக்காது.

பொருட்கள் வாங்க முக்கியத் தகுதி உங்களிடம் ரேஷன் அட்டை இருக்க வேண்டும்.

ரேஷன் அட்டை வாங்க இந்தப் பதிவைத் தொடர்ந்தால் போதுமானது.

என்றும் உங்கள்
ஊழியன்
ரேஷன் கடை ஆள்